இலங்கை

நாட்டில் 68 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை!

வெளிநாட்டில் தலைமறைவாகி திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தும் 68 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,” கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) துபாயில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் எமக்கு அறிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதர காரணங்களால் மேலும் 6 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு கைத்துப்பாக்கி, 3 ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அண்மையில் கல்கிசை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் மீட்கப்பட்டிருந்தது.” என கூறியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *