உலகம்

டீப்சீக் தடைசெய்த நாடுகளுக்கு சீனா கண்டனம்

டீப்சீக்(Deepseek) செயலிக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நாடுகளுக்கு சீனா(China) கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில், அண்மையில் சீனாவும் டீப்சீக் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏஐ செயலியை பயன்படுத்தும்போது தரவுகள் திருடப்படலாம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சில நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. அமெரிக்க நாடாளுமன்ற ஊழியர்கள் கணினி மற்றும் தொலைபேசிகளில் டீப்சீக் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய நிதித்துறை அமைச்சகம் செட்ஜிபிடி, டீப்சீக் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களை அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அரசின் பாதுகாக்கப்பட்ட தரவுகள், ஆவணங்கள் ஆகியவற்றின் ரகசியத்தன்மை சீர்குலையும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி டீப்சீக் பயன்பாட்டை தடைசெய்துள்ளன.

டீப்சீக் செயலிக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நாடுகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “சட்டங்களுக்கு எதிராக தரவுகளை சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ நாங்கள் எந்த நிறுவனத்தையோ அல்லது தனி நபரையோ ஒருபோதும் கேட்டதில்லை, ஒருபோதும் கேட்க மாட்டோம். தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை மிகைப்படுத்தவோ அல்லது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை அரசியலாக்கவோ எடுக்கும் நடவடிக்கைகளை சீனா எப்போதும் எதிர்த்து வருகிறது.

சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம்” என சீனா கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *