துபாயில் இருந்து வந்த தகவலின் காரணமாகவே கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர் சில மணி நேரங்களுக்குள் பிடிபட்டதாகவும், காவல்துறையின் திறமையால் அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே குறிப்பிட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் படங்களைப் பகிர அனுமதிக்க வேண்டாம் என்றும் அவற்றில் குற்றவாளி அதிகாரிகளுடன் அன்பாக நடந்துகொள்வது போல் தெரிகின்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். புகைபப்படங்களை வெளியிட்டு கொலையில் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை ஒரு ஹீரோவாக மாற்றியதற்காக அதிகாரிகளுக்கு விமர்சனங்களையும் முன்வைத்தார்.
குறித்த விடயம் தொடர்பில், விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் அளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சில படங்கள் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி கையாளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் இதுபோன்ற விடயங்களை முன்வைப்பதற்கு முன் உண்மைகளைச் சரிபார்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.