அம்பாந்தோட்டை திட்டத்தில் மோசடி குற்றச்சாட்டில் மகிந்த ராசபக்சவின் பெயர் தெரிவிக்கப்பட்டிருந்ததை அறிந்துகொண்டே 2005இல் பிரதமராக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்திருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி 2005இல் எடுத்த தவறான தீர்மானங்களின் பெறுபேறாகவே மோசடிகள் தொடரபில் கதைக்க வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் (27.02.2025) 2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர், ராஜபக்சர்களின் ஊழல் மோசடிகளுக்கு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும். 2005ஆம் ஆண்டில் ராஜபக்சர்களை ஆட்சியில் இருப்பவர்களே ஆட்சிக்கு கொண்டு வந்தனர். அப்போதும் நான் அவர்களுக்கு எதிரான தரப்பிலேயே இருந்தேன். ராஜபக்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று இப்போது கூறுபவர்கள், அவர்தான் சிறந்த நபர் என்று கூறும் மேடையிலேயே அன்று இருந்தனர்.
தவறான அரசியல் தீர்மானங்களின் பெறுபேறுகளையே இப்போது நீங்கள் கூற வேண்டி ஏற்பட்டுள்ளது. ராஜபக்சர்கள் திருடர்கள் என்று தெரிந்துகொண்டே ஆட்சிக்கு கொண்டுவந்தீர்கள். ராஜபக்சர்களின் மோசடிகளை கூறும் போது எங்களை பார்த்து கூற வேண்டாம். நீங்கள் எடுத்த தவறான தீர்மானத்திற்கே இன்று மக்கள் நட்ட ஈட்டை செலுத்த வேண்டியுள்ளது” என்றார்.