ஜிசாங் என்ற திபெத் மற்றும் ஜின்ஜியாங் என்ற உய்குர் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவை ஆதரிக்கவும், இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே சீன கொள்கையுடன் இணைக்கவும் இலங்கையின் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. 15 வயதில் இருந்தே அரச தலைவராக இருந்த பௌத்த மத ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் தாயகமான ஜிசாங் அல்லது திபெத், 1951ஆம் ஆண்டு சீனாவால் இணைக்கப்பட்டபோது, இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
1965ஆம் ஆண்டில், ஜிசாங் என்ற திபெத் ஒரு தன்னாட்சிப் பகுதியாகவும், சீன மக்கள் குடியரசின் மாகாண அளவிலான பிரிவாகவும் மாற்றப்பட்டது. திபெத் பிரச்சினையை ஒரே சீனா கொள்கையுடன் இணைக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு அறிக்கையின், இலங்கையின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
திபெத் சீனாவின் பகுதி என்றும், சீனாவைப் பிரிக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக, சீனாவின் ஆட்சேபனைகள் காரணமாக, கண்டியின் புனித தந்தம் அனுராதபுரத்தின் ஸ்ரீ மகா போதி ஆகியவற்றை வழிபட தலாய் லாமா விடுத்த வேண்டுகோளை, இலங்கை அரசாங்கங்கள் நிராகரித்தன.
ஆனால் திபெத்தின் அரசியல் நிலை குறித்து, இலங்கையின் முன்னைய அரசாங்கங்கள் அமைதியாகவும் உறுதியற்றதாகவும் இருந்தன. சீனாவிற்கு எதிரான மேற்கத்திய சக்திகளின் ஆதரவைப் பெற்ற தலாய் லாமாவுக்கு, திபெத்தின் விடுதலைக்கான அவரது அகிம்சை போராட்டத்திற்காக 1989இல் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த வாரம் பீய்ஜிங்கில் இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இடையே நடந்த உச்சிமாநாட்டு அளவிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், “இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் முக்கிய நலன்கள் மற்றும் முக்கிய கவலைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பரஸ்பர ஆதரவை உறுதிப்படுத்தினர். இலங்கை, சீனாவின் ஒரே-சீனா கொள்கையை ஆதரிக்கிறது மற்றும் “தாய்வான் சுதந்திரத்தை” எதிர்க்கிறது. ஜிசாங் மற்றும் ஜின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகளில் இலங்கை சீனாவை “உறுதியாக ஆதரிக்கிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
சீனா, தாய்வான் பிரச்சினையை திபெத் பிரச்சினையுடன் சமன்படுத்தி, அதை ‘ஒரே சீனா கொள்கையின்’ கீழ் கொண்டு வந்துள்ளது என்று இராஜதந்திர ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திபெத் பிரச்சினையை இலங்கையுடனான கூட்டு அறிக்கைகளில் கொண்டு வருவதற்கான சீனாவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டு நாடுகளுக்கான கூட்டறிக்கையில், திபெத் மற்றும் உய்குர் என்ற சொற்களுக்கான குறிப்புகளை கைவிட்டுள்ள சீனா, அவற்றுக்குப் பதிலாக ஜிசாங் மற்றும் ஜின்ஜியாங் என்ற பெயர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஜின்ஜியாங் என்பது பெரும்பாலும் முஸ்லிம் மாகாணமாகும், அங்கு உய்குர் பிரிவினைவாத குழுக்கள் பீய்ஜிங்கிலிருந்து சுதந்திரத்திற்காகப் போராடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதியின் சீனாவுக்கான அரசமுறை விஜயத்திற்கு முன்னதாக, ‘ஒரே சீனா’ கொள்கையின் நீண்டகால நிலைப்பாட்டை இலங்கையின் அமைச்சரவை அங்கீகரித்திருந்தது. அநுரகுமார திசாநாயக்கவின் சீன பயணத்துக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட ‘ஒரே சீனா’ கொள்கைக்கான அமைச்சரவை ஒப்புதலில் ஜிசாங் மற்றும் ஜின்ஜியாங் பற்றிய குறிப்புகள் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.