இலங்கை

சபையில் எதிர்க்கட்சிகளுக்கு அநுர தரப்பு சாட்டையடி!

அநுர குமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு தொடர்பில் எதிர்க்கட்சிகள் கூறி வந்த விமர்சனங்களுக்கு அரசாங்கம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது. கடந்த 05 மாதங்களில் ஜனாதிபதி அநுர குமார மேற்கொண்ட 03 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபா எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கான விமான பயணச்சீட்டுகளை சீன அரசாங்கம் வழங்கியதாகவும், இந்தப் பயணத்திற்காக ஜனாதிபதி செயலகம்  386,000 ரூபா மட்டுமே செலவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி அநுரவிற்கு விஜயம் செய்ததற்காக வழங்கப்படும் கொடுப்பனவாக 2,055 அமெரிக்க டொலர்கள் கிடைத்ததாகவும், அவை எந்த செலவும் இல்லாமல் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிபிட்டுள்ளார்.

இந்திய விஜயத்தின் போது விமான பயணச் சீட்டுக்காக 3.12 லட்சம் ரூபா மற்றும் இராஜதந்திர நினைவுப் பொருட்களுக்காக ஒதுக்கப்ட்ட பணம் உட்பட 12.20 லட்சம் ரூபா செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரவின் துபாய் விஜயத்தின் போது, விமான பயணச் சீட்டு அந்நாட்டிலிருந்து பெறப்பட்டதாகவும், கொடுப்பனவாக கிடைத்த 960 அமெரிக்க டொலர்களும், ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்றையதினம் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவும் வெளியிடப்பட்டதுடன், அதன் போது தற்போதைய ஜனாதிபதி அநுரவின் செலவுத் தொகையும் வெளியிடப்பட்டது. அநுரவின் செலவாக வெளியிடப்பட்ட தொகை மிகவும் சிறிய தொகை என்பதால், குறித்த விடயம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியிருந்ததுடன், பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்திருந்தன.

பின்னணியில், அவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *